Sunday, February 18, 2024

ரவா மீது அவா...

 அம்மி கொத்தியது போல தன் தேகமெங்கும் துளைகள் இருக்கும் யம்மியான ரவா தோசையை இரசித்து சுவைப்பது 65 ஆவது கலை என்பேன்! 

நமக்குக் காவிரியைத் தராத கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரப்பட்ட பெருமை ரவா தோசைக்கு உண்டு! 

ரவா தோசையில் சாதா ரவா, ஆனியன் ரவா, மசால் ரவா, வெஜிடபுள் ரவா, டிரைஃப்ரூட் ரவா, நெய் ரவா, போன்றவை பிரபலமான வகைகள்...! 


மதுரையில் முட்டை வெள்ளைக் கரு ரவா என்பது முன்பு  ஐயப்பா தோசைக் கடையில் இ . பி . எஸ் & ஓ.பி.எஸ் போல ஒன்றாக இருந்தது!...


இப்போது அவர்கள் கடை 100 சதவீத வெஜிடேரியன் ஆகிவிட்டபடியால் அந்த தோசையை மிஸ் செய்தவர்களில் நானும் ஒருவன்! 


வாங்க முதலில் சாதா ரவா தோசையில் ஆரம்பிப்போம்...! 


மிளகும் உடைத்த முந்திரியும் தூவி வார்க்கும் தோசை! ...


 முறுகலா ரவா தோசை என்பதே இதற்கு

உண்மையான லட்சணம்...


ஆனால் சிலர் அப்பளம் போல அதி முறுகலாக சுட்டு இதன் மாண்பை குலைத்து விடுவார்கள்...


அந்த முறுகல் எப்படி இருக்கணுமுன்னா வேஃபர்ஸ் எனப்படும் பிஸ்கெட் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த பதத்தில் இருத்தல் சாலச் சிறந்தது ...


சுவைத்தால் அப்படியே வாயில் கரைய வேண்டும்... 


மாவட்டமான 1 ரவா தோசையை நான்கு உள் வட்டமாக பிரித்து கொள்ளவும்.


முதல் வட்டம் அதன் விளிம்புகள்! அது முறுகலாகவும், அடுத்த வட்டம் மென் முறுகலாகவும், 3வது வட்டம் முறுகலும் மென்மையும், 4 வது வட்டம் பஞ்சு போல மென்மையாகவும் இருப்பதே மிகச் சிறந்தது...


சாதா ரவா தோசை ராமன் போல... அதற்கு ஏற்ற ஒரே சீதை தேங்காய் சட்னி மட்டுமே!  ..


சாம்பார் ஊற்றுவது என்றால் அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் ஓகே! 


ரவா தோசை மீது சாம்பாரைக் கொட்டி.. 

ஊற வைத்துச் சாப்பிடுவது ஒரு பாவச் செயல்!..


ஆகச்சிறந்த ரசனை கெட்டவர்கள் தான் அப்படி சாப்பிடுவார்கள்!...


மிளகு சேர்க்காத ரவா தோசையில் சிலர் பச்சை மிளகாய் போடுவார்கள் ...

அது இன்னும் டிவைன்...


வெஜிடபிள் ரவாவில் காரட், வெங்காயம், தேங்காய், மிளகாய், பீன்ஸ், முட்டை கோஸ் எல்லாம் துருவிப் போடுவார்கள்!...


இதற்கு தக்காளி சட்னி & புதினா சட்னி செம தூளாக இருக்கும்...


வெஜ் ரவாவும் அதி முறுகலாக இருக்கக்கூடாது என்பதே ஆதார விதி! ...


ரவா தோசை எல்லாம் அப்படியே கல்லில் இருந்து எடுத்தவுடன் தட்டுக்கு வரவேண்டிய சமாச்சாரம்! ..


அதை ஆற வைத்து தின்பது பெருங்குற்றமாகும்! ...


கொஞ்சம் முறுகலில் ஒரு விள்ளல் அடுத்து பஞ்சு போன்ற இடத்தில் ஒரு விள்ளல் இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்து சட்னியில் தோய்த்து ருசிப்பது ரவா தோசையினை ரசித்து

சாப்பிடும் முறையாகும்...


முறுகலான ரவா கூட சாப்பிடலாம் கருகலான ரவா கம்பெனிக்கு ஆகாது!..


அதை தவிர்த்து விடுவது நலம். ..


ரவா தோசையின் மகாராஜா ஆனியன் ரவா ..


அதை மரியாதையுடன் கையாள்வது 66 வது கலை! 

ஆனியன் ரவா இருக்கிறதே அதை வார்ப்பதே ஒரு சிற்பி சிற்பம் வடிப்பது போல...


ரவா மாவை ஊற்றி பச்சையாக நறுக்கிய வெங்காயத்தை தூவி.. இருங்க பாஸ்..

நீங்க எல்லாம் பிறந்ததே வேஸ்ட்டு! 


ஆனியன் ரவாவில் போடப்படும் வெங்காயம் என்பது 3 மாதக் குழந்தையை குளிப்பாட்டுவது போல!...

அதில் ஒரு லாவகம் இருக்கவேண்டும்...


காய்ந்த தோசைக் கல்லில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய  வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்! 


பாதி பழுப்போ அல்லது பொன்னிறமோ வந்த பின்பு அதை தனியே எடுத்து வைத்து விட்டு பிறகு மாவு ஊற்றி வதக்கிய

வெங்காயத்தை அப்படியே மேலே பரப்பி விட வேண்டும்....


ஒரிரு பச்சை மிளகாயை மெலிசாக நறுக்கிச் சேர்ப்பது இன்னும் சிறந்தது! 

வெங்காயம் போர்த்தியதும் ரவா தோசையானது பொன்னாடை போர்த்திய அரசியல்வாதி ஆகி முறுக்கேறிவிடும் ...

அந்த முறுகலை முக்கோணமாக மடித்து எடுக்கவேண்டும்...

கர்நாடக ஆனியன் ரவாவில் இட்லிப் பொடி தூவுவார்கள்...

 அது தனி ருசி இந்த ஆனியன் ரவாவுக்கு.. 


மிக கெட்டியான தேங்காய் சட்னி வைத்து சாப்பிடாவிட்டால் நீங்கள் இதை சாப்பிடவே வேண்டாம்...

 வெந்த வெங்காயத்துடன் கொத்து கொத்தாக பொக்லைன் இயந்திரம் மண் அள்ளுவது போல பிய்த்து தின்பவர்களாக இருந்தால் தயவு செய்து ஓரமாக ஒதுங்கி விடுங்கள்! ...


முதலிரவில் முதல் உறவில் ஒரு பெண்ணின் அச்சம் விலக்கி சரசக் கலையில் அவளையே மயக்குவது போல  இதைக் கையாள வேண்டும்! ...


ஒரு வீணையை மீட்டுவது போல தேர்ந்த மசாஜ் கலைஞரின் மசாஜ் போல ஆனியன் ரவாவை சாப்பிடவேண்டும்... ஆனியன் ரவாவில் சேர்க்கும் வெந்த வெங்காயம் மோடி அமித்ஷா போல தோசையோடு பின்னிப் பிணைந்திருக்கும்...


பச்சை வெங்காயம் எடப்பாடி பன்னீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும்...


ஆற்றங்கரையோரம் உலா வருவது போல  ஆனியன் இல்லாத விளிம்புகளை முதலில் ஓரமாக

பிய்த்து சாப்பிட்டுக் கொண்டே ஆனியன் துவங்கும் பகுதிக்கு வரவேண்டும் ...

முக்கோணமாக மடித்த ரவா மூன்றடுக்கில் இருக்கும்! 

அந்த அடுக்குகளை மொத்தமாக பிய்த்து சாப்பிடாமல் இரண்டு இரண்டு அடுக்காக கிரிஸ்பியாக வெந்த ரவா தோசை மேலும் கீழும் இருக்க நடுவில் வெங்காயம் என விண்டு, இதை சாண்ட்விச் விள்ளல் எனலாம்..., விண்ட விள்ளலை கெட்டிச் சட்னியில் வலது, இடது,

மேல், கீழ் என நாலாபுறமும் நன்கு தோய்த்து சாப்பிடுதல் மிகச் சிறப்பு...,


லேயர் லேயராக இப்படி ஆனியன் ரவாவைச் சாப்பிடுவதே மிகச் சிறந்த செயலாகும்...


சில வேளைகளில் அடை அவியல் கிடைத்தால் ஆனியன் ரவாவிற்கு அது குட் காம்போ! 

சொதியும் கூட! 


இருப்பினும் தேங்காய் & வெங்காயச் சட்னிகள் தான் இதற்கு சரியான இணை! 


ஆனியன் ரவாவில் இட்லிப் பொடி தூவுவது திருமண வரவேற்பில் பன்னீர் தெளிப்பது போல மிகவும் சிறந்த முறையாகும்...


முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அதை சாதா ரவாவிலோ அல்லது ஆனியன் ரவாவிலோ விட்டு பெப்பர் தூவி சாப்பிடும் சுகம் எல்லாம் ஆயிரம் தேவ கன்னிகைகளிடம் கூட காணாத சுகமாகும்!...


மசால் ரவா தோசை என்பது பூரி மசாலா எனினும் அது ரவா தோசையின் அத்தனை துளைகளையும் அடைத்துப்பூசி மெழுகும் தோசை.! 


இது கொஞ்சம் முறுகல் அதிகம் இருக்கலாம் ...


இதற்கு மிளகாய்சட்னி சிறந்த காம்போ! 

இட்லி மிளகாய் பொடியும் & இஞ்சிச் சட்னியும்  இதற்கு மிக மிக நல்ல காம்பினேஷன்! ...

அதை பார்ப்பதே சொர்க்கம்! 


தேங்காய் ரவா, பருப்பு ரவா, தக்காளி ரவா..

என பல்வேறு வடிவங்கள்  உண்டு ...

பாஸ்தா மசால் ரவா தோசை என்றும் மேகி மசால் ரவா தோசை என்றும் பல வகைகளில் மதுரைக்காரர்கள் உலகளாவிய புகழ் பெற்று தனித்து நிற்கிறார்கள்...


அதற்கு அவர்கள் தரும் சைட்டிஷ்ஷும் பட்டையைக் கிளப்புகிறது!...


எள்ளு & கேரட் சட்னி காம்போ அது! 


என் ஆசான் சுஜாதா சொல்வார் உலகின் மிக ருசியான ரவாதோசை..

என்றால் அது டிரைஃப்ரூட் ரவா தான்.! 


முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, அக்ரூட், சார பருப்பு, பாதாம் பருப்பு,செர்ரி, ஃப்ரூட் ஜெல்லிகள் தூவிய ரவா தோசை அது! 


ராஜ தோரணையுடன் வலம் வரும் அந்த தோசைக்கு எல்லாம் சட்னி சாம்பாரே தேவையில்லை. 


கொஞ்சம் காரக்குருமா போதும்.! 


ரவா தோசைகளை பார்சலாக வாங்குவது ரவா தோசையை நாம் அவமானப்படுத்துவதற்கு சமம்! 


அது திருமணத்திற்கு வாட்ஸப்பில் வாழ்த்துவது போல! ...


கடையில் உண்பது நேரடியாக மணமக்களை வாழ்த்துவது போல! 

...

ரவா தோசைகளை கடைக்குச் சென்று. ரசித்து ருசித்து சாப்பிடுபவர்களுக்காகவே இறைவன் இவ்வுலகை படைத்திருக்கிறான். 


அதே போல ரவா தோசையின் மீது சாம்பார் ஊற்றி சொத சொதன்னு ஆக்கி குழைத்து உண்பவர்களுக்கு..

சர்வ நிச்சயமாக லேட்டஸ்ட் வெர்ஷனில் நரகம் கிடைக்கும்! 


ரவா தோசைகளை ஒரு பூவை நுகர்வது போல மென்மையாகக் கையாண்டு அதை நன்கு ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்! ...


ரவா தோசைகள் நமக்கு அலாதியான ஒரு ருசி மிகுந்த உலகினை காட்டும் அறுசுவைக் கண்ணாடி ஆகும்! 


அதை கீழே போட்டு உடைத்திடாமல் பேணிக் காப்போம்! 


ரவா தோசைகளை காதலுடன் முறையாக ருசிப்போம்...

No comments:

Post a Comment